மின்சாரம் தாக்கி பெண் பலி - எலுமிச்சை பழம் பறிக்க முயன்றபோது சோகம்
எலுமிச்சை பழம் பறிக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
திருவள்ளூர்,
திருவள்ளூர்மாவட்டம் வரதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரி (வயது 26). இவருக்கு திருமணமாகி சந்தோஷ் என்ற கணவர் உள்ளார்.
இந்நிலையில், லோகேஸ்வரின் நேற்று தனது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில் எலுமிச்சை பழம் பறிக்க முயன்றுள்ளார். வீட்டின் மாடியில் ஏறி இரும்பு கம்பியை கொண்டு எலுமிச்சை பழத்தை பறிக்க முயன்றார். அப்போது, வீட்டின் மாடிக்கு அருகே சென்ற மின்சார கம்பி மீது லோகேஸ்வரி கையில் வைத்திருந்த இரும்பு கம்பி பட்டது. அதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த லோகேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே லோகேஸ்வரி உயிரிழந்தார்..
அதேவேளை, தாழ்வாக சென்ற மின் கம்பியை அகற்றக்கோரி பலமுறை புகார் அளித்தும் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி லோகேஸ்வரியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.