பொங்கல் பண்டிகை: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 9 நாட்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.;

Update:2025-01-06 19:40 IST

ஈரோடு,

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியாக மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த மஞ்சளை விற்பனைக்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.

அங்கு ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு வருகிற 11-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11, 12-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நாட்களில் மஞ்சள் ஏலம் நடைபெறாது. எனவே ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் பின்னர் வருகிற 20-ந்தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்