மணப்பெண் பிடிக்காததால் பெயிண்டர் தற்கொலை... குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரியில் மணப்பெண் பிடிக்காததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
குமரி,
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சாத்தன்கோடு வடக்கேதோப்பு பகுதியை சேர்ந்த ராஜு மகன் ராஜேஷ் (வயது 40), பெயிண்டர். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் கேரள மாநிலம் பரிசுவைக்கல் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் ராஜேசுக்கும் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதற்கான நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் வருகிற 9-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இந்தநிலையில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஒல்லியாக இருப்பதாகவும், அவரை பிடிக்கவில்லை என கூறியும் ராஜேஷ் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலையில் ராஜேஷ் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவு திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து வீட்டுக்குள் சென்ற ராஜேஷ் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த சித்தி மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்த போது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், 'எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை' என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜேஷின் தந்தை ராஜு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 4 நாளில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண்ணை பிடிக்காததால் பெயிண்டர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.