எச்.எம்.பி.வி வைரஸ்: தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை
எச்.எம்.பி.வி வைரஸ் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.;
சென்னை,
சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., (HMPV)எனப்படும், 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் குவிந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்தன.
இதற்கிடையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டு மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 3 மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த 2 குழந்தைகளுக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மாநில சுகாதாரத் துறை இந்த விஷயம் குறித்து மத்திய சுகாதாரத் துறையிடம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். எச்.எம்.பி.வி. வைரஸ் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தலைவலி, சோர்வு, இருமல், காய்ச்சல் அல்லது குளிர் ஆகியவை தொற்றுக்கான அறிகுறிகள் என்று சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.