மின்சார ரெயில்கள் ரத்து; நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

பொதுமக்கள் வசதிக்காக நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.;

Update: 2025-01-04 15:36 GMT

சென்னை,

தாம்பரம் பணிமனையில் நடைமேம்பால பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதனையொட்டி பொதுமக்கள் வசதிக்காக நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"05.01.2025 அன்று தாம்பரம் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரெயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 05.01.2025 அன்று தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை மா.போ.கழகம் இயக்க உள்ளது.

மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்