ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-01-06 21:52 IST

சென்னை,

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகியான விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி ரவீந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதாலும், அவரது அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, என குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த ஐகோர்ட்டு, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அறிக்கை தாக்கல் செய்ய விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் நிலுவையில் இருந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், அந்த உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் அந்த உத்தரவை ரத்து செய்கிறேன். தமிழக போலீசாருக்கு ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்த நேரமில்லாத காரணத்தால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுகிறேன். எனவே விருதுநகர் மாவட்ட போலீசார் வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும், என அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்