பாம்பன் புதிய ரெயில் பாலத்தை 2 மணி நேரம் திறந்து சோதனை

சோதனை ஓட்டத்திற்காக நேற்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்டது.;

Update: 2025-01-04 20:11 GMT

ராமேசுவரம்,

பாம்பன் கடலில் சுமார் ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், சுமார் 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குபாலமும் கட்டப்பட்டுள்ளது. அதுபோல் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வுக்கு பின்னர் அவர் அறிக்கையில் தெரிவித்த ஒரு சில குறைபாடுகளும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், ரெயில் போக்குவரத்து தயார் நிலையில் இருப்பதாகவும் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தபோது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் நேற்று சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் ரோடு பாலத்தின் உயரத்திற்கு திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது அரசு பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் தூக்குப்பாலம் திறந்து இருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது பாம்பன் புதிய ரெயில் பாலம் ரெயில் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொண்டு புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ரெயில்வே துறை அமைச்சரும் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்ய வருகை தர உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்