பொங்கல் பரிசு தொகுப்பை உரிய காலத்தில் வழங்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்
பொங்கல் பரிசு தொகுப்பை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தி உள்ளார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (02.01.2025) நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் நுகர்வு செய்யப்படும் பச்சரிசி மற்றும் சர்க்கரையின் தரத்தினை உறுதி செய்திடுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
கரும்பின் நுனியிலிருக்கும் தோகையினை வெட்டாமல் முழுக்கரும்பையும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட கூட்டுறவுத்துறையினருடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். மேலும், பொதுவிநியோக அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகத்தின் நிலையினை மாநிலம் முழுவதும் கண்காணித்து, உடனுக்குடன் குறித்த காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்துப் பொருட்களும் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திடவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் குடும்பங்களுக்கு, புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கிடவும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கேற்ப தேவைப்படும் இடங்களில் புதியதாக நியாய விலைக்கடைகளை திறந்திடவும் அறிவுறுத்தினார்.
புதிய சேமிப்புக்கிடங்குகள் கட்டுவதற்கு தகுதியான நிலங்களைத் தேர்வு செய்திடுமாறு தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிர்வாக இயக்குனர்களை கேட்டுக்கொண்டார். குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள் பொதுவிநியோகத்திட்டப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுப்பதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டியும், எல்லையோர அண்டை மாநிலங்களின் அலுவலர்களுடன் இணைந்து கலந்தாய்வுக்கூட்டங்கள் மேற்கொண்டு அரிசிக் கடத்தலை முற்றிலுமாக ஒழித்திடுமாறும் அறிவுறுத்தினார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து அமைச்சர் அறிவுறுத்தியபடி பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய காலத்தில் தரத்துடன் வழங்கப்படுவதை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.