வந்தேபாரத், தேஜஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), இன்று (வெள்ளிக்கிழமை), 6, 8, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது.
* கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12666), நாளை (சனிக்கிழமை) மற்றும் 11-ந்தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.
* எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), வரும் 7, 11 ஆகிய தேதிகளில் திருச்சி- மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 7-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.
* எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும்.
* நாகர்கோவிலில் இருந்து வரும் 9, 11 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.