அரசு பஸ்சில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவர்கள் - நெல்லையில் பரபரப்பு

பஸ் டயருக்குள் சிக்காமல் பள்ளி மாணவர்கள் தப்பினர்.;

Update: 2025-01-05 02:40 GMT

நெல்லை,

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை பகுதியில் அதிகளவிலான பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் போதும், முடிந்து வீடு திரும்பும்போதும் மாணவ-மாணவிகள் கூட்டத்தின் காரணமாக அப்பகுதி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிரம்பி வழியும்.

இந்த நிலையில் ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு பள்ளிக்கூடம் முன்பு நேற்று முன்தினம் மாணவர்கள் பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் வீட்டுக்கு செல்வதற்காக முண்டியடித்து ஏறினர். அந்த பஸ்சின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்த சூழலில், பின்பக்க கதவு வழியாக அனைவரும் ஏறும் நிலை இருந்துள்ளது.

இதனால் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் பஸ்சில் ஏறிய போது அடுத்தடுத்து பஸ்சின் அடிப்பகுதியில் அவர்கள் கீழே விழுந்துள்ளனர். ஆனால் மாணவர்கள் கீழே விழுந்த போதிலும், டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்கி சென்று உள்ளார். இதில் ஒரு சில மாணவர்கள் லேசான காயம் அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக டயருக்குள் சிக்காமல் தப்பி உள்ளனர்.

இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் பஸ்சை, டிரைவர் ஓட்டிச்சென்றதாக சமூக வலைதளத்தில் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்