தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பதிலில், காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது.
குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு குண்டர் சட்டங்களில் கைது செய்யப்படுகின்றனர்.
முந்தின ஆண்டை காட்டிலும் குற்றச்சம்பவங்கள் 2024-ல் 31,438 ஆக குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் பழிக்குப்பழி வாங்குவோரின் கொலைகளும் குறைந்துள்ளன என கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த 4 கொலை சம்பவங்கள் தொடர்பாக அ.தி.மு.க. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதுபற்றி தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக செல்கிறது.
சட்டத்தின் முன் யாரும் தப்ப முடியாது என முதல்வர் நேற்று கூறிய நிலையில் நான்கு கொலைகள் நடந்துள்ளன. முக்கிய பிரச்சினைகளை தான் கவன ஈர்ப்பாக கொண்டு வருகிறோம் என கூறினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கார், அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளார். அவையில் தான்பார்த்த விசயங்களை பற்றி பேச வேண்டும் என கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், என்ன விசயங்களை பார்த்துள்ளார் என்ற விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
சட்டசபை கூட்டத்தொடரில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்து பேசினார். இந்த நிலையில் அவரை பேச அனுமதிக்கவில்லை என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மக்களவையில் வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்த நிலையில், அப்படி வரவேண்டாம் என சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டு கொண்டார்.
இதனை தொடர்ந்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், பஞ்சாப் போலீசார் நேற்று மாலை அந்த பகுதிக்கு சென்று போக்குவரத்துக்கு தடையாக இருந்த தடுப்பான்களை அகற்றினர். புல்டோசர்களை கொண்டும் அவற்றை இடித்து தள்ளினர்.
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள முக்கிய விவசாய தலைவர்களான ஜெகஜீத் சிங் தல்லேவால், சர்வன் சிங் பாந்தர் உள்ளிட்டோர் போலீசாரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, எல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அகற்றிய நிலையில், அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,480-க்கும், ஒரு கிராம் ரூ.8,310-க்கும் விற்பனையாகி வருகிறது.
கோவையில் லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ. சஸ்பெண்டு செய்யப்பட்டார். வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்த விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் கேட்டு சிக்கிய வி.ஏ.ஓ. வெற்றிவேல், லஞ்ச பணத்துடன் பேரூர் குளத்தில் குதித்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டு உள்ளார்.
சென்செக்ஸ் குறியீடு 478.13 புள்ளிகள் உயர்ந்து 75,927.18 புள்ளிகளாக உள்ளது.
இதேபோன்று, நிப்டி குறியீடு 149.1 புள்ளிகள் உயர்ந்து 23,056.70 புள்ளிகளாக உள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்து மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட இப்பணியிடங்களுக்கு நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.arasubus.tn.gov.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு, செய்முறை மற்றும் நேர்காணல் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.