கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மதுபோதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் 50வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ள அன்புச் சகோதரர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோயம்பேடு - ஆவடி மெட்ரோ புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம்
சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் சீரமைப்பு நீளம் சுமார் 20 கி.மீ. ஆக அதிகரிக்கும். இதற்கு ரூ.6,500 கோடி வரை கட்டுமான செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும்கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை: 700 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ்
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளிலேயே சரிவுடன் தொடங்கி உள்ளது.
இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகளும், நிப்டி 200 புள்ளிகள் வரையிலும் சரிந்துள்ளது. கடந்த வாரமே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்த நிலையில் இந்த வாரமும் சரிவுடன் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலய திடலில் ‘சென்னை சங்கமம்' திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
துபாயில் நடைபெற்று வரும் 24 எச் கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில் 3வது இடத்தைப் பிடித்த அஜித் குமார் அணியினருக்கும் Spirit of the Race விருது பெற்ற அஜித் குமாருக்கும் எனது பாராட்டுக்கள் அஜித்குமாரும், அவரது அணியினரும் மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது நல்வாழ்த்துகள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதகடிப்பட்டு மேம்பாலத்தின் மீது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இறந்த 4 பேரில் பிரபாகரன் என்பவர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பெண்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 5வயது சிறுமிக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சிறுமி தொற்றால் பாதிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பிய நிலையில் மேலும் ஒரு சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை மீண்டும் 59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் விடுமுறை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று சிறப்பு ரெயில்
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று (ஜன.13ம் தேதி) பிற்பகல் 2.15 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முன்பதிவில்லா சிறப்பு ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், அரியலூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.