ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது: மு.க.ஸ்டாலின்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயக விரோத இந்த நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும். ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்’ என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஜனவரி 2025 முதல் இந்தியர்களுக்கு இ-விசா: தாய்லாந்து அறிவிப்பு
இந்திய பாஸ்போர்ட் வைத்து உள்ளவர்கள், வரும் ஜன., 1 முதல் இ-விசாவை பெற்றுக் கொள்ளலாம் என டெல்லியில் உள்ள ராயல் தாய்லாந்து தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உபரி நீர் திறப்பு, 1,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் 2, 3, 4 ஆகிய பிரிவுகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்குகளில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பதில் மனுவின் நகல்களை மனுதாரர்களுக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை நடப்பதற்குள் புதிய மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்றும் கூறி உள்ளது.
வானிலையை ஏன் துல்லியமாக கணிக்க முடியவில்லை..? - பாலச்சந்திரன் விளக்கம்
தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், “வானிலை பலவிதமான காரணிகளை கொண்டிருப்பதால் துல்லியமாக கணிக்க இயலாது. இன்றைய சூழலில் புயல், கனமழை போன்றவற்றை கணிப்பது குறித்து முழுமையான அறிவியல் இல்லை. செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம்.
புயலுக்குள் ஆய்வு விமானங்களை செலுத்தி விவரங்களை பெற்றுக் கூட வானிலை கணிப்பானது செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் சில நேரங்களில் தவறாகி விடுகிறது. தொழில்நுட்பத்தை வைத்து மட்டுமே வானிலையை துல்லியமாக கணிக்க முடியாது, தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர் மழை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை
கனமழை எச்சரிக்கை காரணமாக, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை பதவிநீக்கம் செய்யும்படி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தனர். இதற்கு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மாநிலங்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களின் வாக்குவாதம், அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய அலுவல் எதுவும் நடைபெறவில்லை.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அந்தமானை ஒட்டிய கடற்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தமிழகத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளது.