உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
கனமழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேமம் ஏரி திறக்கப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து மேலும் உயர்ந்துள்ளது. இன்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 6,622 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மொத்தம் 24 அடி கொண்ட ஏரியில் நீர்மட்டம் 22.43 அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,230 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
இதற்கிடையே செம்பரம்பாக்கம் சேன்ட்ரோ சிட்டி குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
அடுத்த இரண்டு வாரத்திற்கு புயல் உருவாக வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீது விவாதம்.. நாளை தொடங்குகிறது
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில், அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நாளையும் நாளை மறுதினமும் (வெள்ளி, சனி) விவாதம் நடத்தப்படுகிறது.
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி வைப்பார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநிலங்களவையில் இதேபோன்ற விவாதத்தை தொடங்குவார் என தெரிகிறது. அரசியலமைப்பு மீதான விவாதத்தின் நிறைவில் பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செஸ் உலக சாம்பியன் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை குகேஷ் பதிவு செய்திருப்பதாக அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி.குரூப்2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/) அறிந்துகொள்ளலாம்.
உலக சாம்பியன் ஆனார் குகேஷ்
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பரபரப்பான 14-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், டிங் லீரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், 58-வது நகர்த்தலில் வெற்றியை வசமாக்கினார்.
விஸ்நாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டம் பெறும் இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
தொடர் மழை... தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மாலை நிலவரப்படி ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 21.9 அடி அளவுக்கு நிரம்பி உள்ளது. மொத்த கொள்ளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,094 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 5,440 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.