தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னரை வசைபாடக் கூடாது - ஓ.பன்னீர்செல்வம்

கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட தவறுக்காக கவர்னரை வசைபாடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-20 10:29 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

தமிழ்நாடு கவர்னர் கலந்து கொண்ட சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், "தமிழ்த் தாய் வாழ்ந்து" பாடும்போது, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டது என்பது மிகப் பெரிய தவறு. இதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.

இது கவனக் குறைவு காரணமாக ஏற்பட்ட தவறு என்று சென்னை தூர்தர்ஷன் விளக்கம் அளித்திருக்கிறது. எனவே, இது தூர்தர்ஷன் நிர்வாகம் செய்த தவறு. இதனை, கவர்னர்தான் செய்தார் என்று கற்பனை செய்து கொண்டு, அவரை வசைபாடுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்தக் குற்றச்சாட்டினை மேற்கு கவர்னரே மறுத்துள்ளார்.

இந்தத் தருணத்தில், எம்.ஜி.ஆர். நடித்த 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற படத்தில் வரும் "தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்" பாடல் வரிகளை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

இதற்கேற்ப, செய்த தவறினை தூர்தர்ஷன் நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகும், கவர்னரை வசைபாடுவது என்பது அரசியல் விளம்பரத்திற்காக தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மேற்கொள்ளப்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துவிடும்.

தூர்தர்ஷன் நிர்வாகத்தில் ஏற்பட்ட கவனச் சிதறல் என்று தூர்தர்ஷன் நிர்வாகமே ஒப்புக் கொண்டிருப்பதையும், கவர்னர் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை மறுத்திருப்பதையும் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்