'சிறார்களை சீர்திருத்தும் முயற்சிகள் தமிழகத்தில் பரவவில்லை' - மதுரை ஐகோர்ட்டு கிளை

சிறார்களை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை தமிழகத்தில் பரவவில்லை என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.

Update: 2024-11-22 16:09 GMT

மதுரை,

மதுரையை சேர்ந்த ஜனா என்ற இளைஞர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர் செல்போனை திருடியதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு 19 வயதாகும் சூழலில், அவரை கைது செய்த அன்றே அவர் மீது 4 வழக்குகள் பொய்யாக பதியப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசுத் தரப்பில், "மனுதாரர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலவையில் உள்ளன. அவர் தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "ஒரு இளைஞன் ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டாலும், காவல்துறையினர் தன்னை வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பது புரிந்தவுடன் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறான். ஒரு கூட்டத்தின் தலைவனாகிறான். குற்றவாளிகளாக மாறிய பல சிறார்களின் கதை இது. சிறார்களை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை தமிழகத்தில் பரவவில்லை.

இந்த உத்தரவை தமிழக சிறை துறையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மதுரை சரக சிறை துறையின் துணை காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர் செப்டம்பர் 29-ந்தேதியில் இருந்து சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்