மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு நாளை விருந்து - விஜய் ஏற்பாடு
மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு சமீபத்தில் தவெக சார்பில் பசுமாடு, கன்றுகுட்டியை இலவசமாக வழங்கினர்.
சென்னை,
கடந்த அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் தனது கட்சி கொள்கை மற்றும் அரசியல் நிலவரம் என பல்வேறு கருத்துக்களை கூறினார்.
இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல ஏற்பாடு செய்து கொடுப்ப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில், நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயிக்கு இலவசமாக பசுமாடு, கன்றுகுட்டியை தவெக நிர்வாகிகள் வழங்கி குதுகலப்படுத்தினர்.
இந்நிலையில், தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் , நாளை விருந்து அளிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
நாளை, வி.சாலை நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் 100க்கணக்கானோர் அவர்கள் குடும்பத்துடன் இந்த விருந்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், இதற்கான பேருந்து ஏற்பாடுகளையும் தவெக கட்சியினர் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணியளவில் இந்த விருந்து நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்துக்கு விஜய் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.