நெல்லை: தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் கைது

2 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2024-11-22 13:22 GMT

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் அந்த தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 2 நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இந்நிலையில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களில் ஒருவரை போலீசார் நேற்று முன்தினம் கண்டு பிடித்தனர். அவர் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின் என்பது தெரியவந்து. அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது மேலப்பாளையம் ஆசிரான் மேலத் தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி(29) என்பது தெரியவந்தது. அவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, அவர்களிடம் பெட்ரோல் குண்டுகளை வீசியது குறித்து விசாரித்தபோது அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதால் அதற்கு ஏதாவது ஒன்று செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு ஈடுபட்டதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த வாலிபர் இவர்கள் 2 பேரின் கூட்டாளி என்பதும், அவரும் மேலப்பாளையத்தில் தான் பதுங்கி இருக்கிறார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்."

 

Tags:    

மேலும் செய்திகள்