கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 343-ல், "கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிர் இழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் விவேகானந்தன் அவர்கள் 22-11-2020 அன்று கோவிட் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். அவர் இறந்து இன்று நான்கு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இதுவளர அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இழப்பிடோ. கருணை அடிப்படையிலான வேலையோ வழங்கப்படவில்லை என்றும், மருத்துவரின் தந்தை நான் அந்தக் குடும்பத்தை தற்போது காப்பாற்றி வருகிறார் என்றும், மத்திய அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் அரசு மருத்துவர்களுக்கான சட்டக் குழு தெரிவிக்கிறது.
ஓர் அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டுமென்பது விதி. இந்த விதியின்படி, அரசுப் பணி வேண்டி விவேகானந்தர் மருந்துவர் அவர்களின் மனைவி விண்ணப்பித்ததாகவும், அவர் பொறியியல் படிப்பு முடித்துள்ளதாய் பொறியாளர் பணி கேட்டதாகவும், அது இல்லாதபட்சத்தில் அவரின் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணி கொடுத்தால் அதனை ஏற்கத் தயார் என்று கூறியதாகவும், ஆனால் இதுவரை எவ்வித அரசப் பணியும் வழங்கப்படவில்லை என்றும் அரசு மருத்துவர்களுக்கான சட்டக் குழு தெரிவிக்கிறது. மேற்படி மருத்துவர் கொரோனா தொற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில், சிறப்பு நேர்வாக அவரது மனைவிக்கு அரசு வேலையை உடனடியாக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நான்கு ஆண்டுகள் கழிந்தும் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு இன்னமும் கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. பக்களுக்காக பணியாற்றி தன் உயிரைக் கொடுத்த மருத்துவரின் குடும்பத்தை வறுமையில் வாட வைப்பது நியாயம்தானா என்பதை அரசு யோசித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்று, பல மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடும், கருணை அடிப்படையிலான அரசு வேலையும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மருத்துவர் விவேகானந்தன் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் ஆகின்ற இந்த நேரத்திலாவது, அவருக்குரிய 25 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த இதர முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலையினை வழங்கவும் முதல்-அமைச்சர் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.