'மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவ வேண்டும்' - முத்தரசன் அறிவுறுத்தல்

மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவ வேண்டும் என முத்தரசன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-10-15 07:51 GMT

சென்னை,

மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் காக்க உதவிடும் வகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்புகளும், உறுப்பினர்களும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாலும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடுமையான கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தலைநகர் சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மழைக்கால பேரிடரை எதிர்கொள்ளவும், மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதுகாக்கவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் கூடி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மின்சாரம், பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இயற்கை பேரிடரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடி நிவாரணம் கிடைக்கவும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்புகளும், உறுப்பினர்களும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்