கொச்சி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொச்சி சென்றடைந்தார்.

Update: 2024-12-11 07:24 GMT

சென்னை,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் பெரியார் சமூகநீதி காக்க போராடி வெற்றி பெற்றார். அந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வைக்கத்தில் பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு உள்ளது.

வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்று நூற்றாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் நகரில் உள்ள பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் புதுப்பித்திட ரூ.8 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

அதன்படி புனரமைப்பு பணிகளும், நூலகத்தை விரிவுபடுத்தும் பணிகளும் நடந்து முடிந்துள்ளன. அதில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான அரிய புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சி கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா ஆகியவை சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலையும் இருக்கிறது.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார்.

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோரும், கேரளா மாநில மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வரவேற்று பேசுகிறார். கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் நன்றி கூறுகிறார்.

இந்த நிலையில், வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார். கொச்சி விமான நிலையம் சென்றடைந்த முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக வைக்கம் நூற்றாண்டு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், "நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்