சமூக வலைதளங்களில் முதல்வரை விமர்சிப்போரை கைது செய்வது கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்

சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-12-28 21:45 GMT

கோப்புப்படம் 

சென்னை,

வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி பொதுமக்களின் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழாவா நடத்த முடியும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த முதல்-அமைச்சரின் போஸ்டர் மீது மூதாட்டி ஒருவர் செருப்பை வீசி மண்ணை தூற்றிய வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கூறி இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களையும், இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தையே சீர்குலைக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருள் விற்பனையையும் தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, சமூக வலைதளங்களில் அரசையும், முதல்வரையும் விமர்சிப்போரை தேடித் தேடி கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

பால் விலை உயர்வில் தொடங்கி மின்சாரக் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி பொதுமக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றி, தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட போராடும் சூழலை உருவாக்கிய முதல்-அமைச்சர் மீது மண்ணை தூற்றி வீசாமல் மாலை அணிவித்து பாராட்டு விழாவா நடத்த முடியும் ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞரை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, சம்பந்தப்பட்ட மூதாட்டி மீதான புகாரில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்