தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

Update: 2024-12-29 14:23 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். அவ்வாறு இன்று தங்கள் குடும்பத்தோடு ஊட்டிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர்.

குறிப்பாக படகு இல்லத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள், மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு உள்ளிட்டவற்றில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். கிறிஸ்துமஸ் நாளான 25 ஆம் தேதியிலிருந்து இன்று வரை, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் படகு இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால், ஊட்டி சாலைகளில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தொடர்ந்து புத்தாண்டு விடுமுறயையொட்டி ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்