அண்ணா பல்கலை. வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த 16 பேர் கொண்ட குழு அமைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள், பெண் பேராசிரியர்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பணிகளுக்கு குழு அமைத்து தேவையான தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவு அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் 40 காவலாளிகளை நியமிக்கவும், ஏற்கனவே 140 காவலாளிகள் இருக்கும் நிலையில் எண்ணிக்கையை 180-ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. விடுதிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வார்டன்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவிகள் பாதுகாப்புக்காக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 30 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.