கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-30 05:34 GMT

சென்னை,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது.

கனமழை காரணமாக வயநாடு சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது,

"வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் விளைவாக விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. முழுவீச்சில் அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்