'தமிழகத்திற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு ஏற்படும்' - அமைச்சர் ரகுபதி
தமிழகத்திற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு ஏற்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நீட் விவகாரம் தொடர்பாக 4 முறை மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக அரசிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாம் தகுந்த விளக்கங்களை கொடுத்திருக்கிறோம்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஏன் விலக்கு வேண்டும்? என்பதற்கான காரணங்களை நாம் விளக்கியிருக்கிறோம். நீட் விலக்கு மசோதாவிலும் அதை தெளிவாக சொல்லியிருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே, தமிழகத்திற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு நிச்சயம் ஏற்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.