மீனவர்கள் பிரச்சினை: இலங்கை அதிபருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இரு நாட்டு தலைவர்கள் இடையேயான விவாதங்கள் நம்பிக்கையை தருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-16 15:40 GMT

சென்னை,

இலங்கையின் அதிபராக அனுர குமார திசநாயகா பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு நேற்று வந்தார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அனுர குமார திசநாயகா பேசும்போது, "இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். அந்த பகுதியில் உள்ள மீனவர்களால் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்கும் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அது இத்தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகா, பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மனிதநேயத்தின் அடிப்படையிலும் அமைதி வழியிலும் தீர்வுகாண்பது குறித்தும், மோதலைத் தவிர்ப்பதை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தை நிகழ்த்தியது வரவேற்கத்தக்கது. இரு தலைவர்கள் இடையேயான விவாதங்கள் நம்பிக்கையை தருகின்றன.

இந்நிலையில், இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்வதையும், பிடித்து வைத்துள்ள அவர்களது படகுகளை விடுவிப்பதையும் அனுர குமார திசநாயகா பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய நடவடிக்கை இந்தப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையை விதைப்பதுடன், நமது இரு நாடுகளுக்கிடையேயான வலுவான உறவுக்கும் அமைதியான எதிர்காலத்துக்கும் வழிவகுப்பதில் ஆக்கப்பூர்வமான நகர்வாக அமையும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்