ஆவினின் 'கிரீன் மேஜிக் பிளஸ்' பால்: அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

கிரீன் மேஜிக் பிளஸ் பால்பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-16 12:59 GMT

சென்னை,

பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திராவிட மாடல் ஆட்சியில் ஆவின் நிறுவனத்தின் சாதனையாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாக ஆவின் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020-ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை தற்போது 2024-2025-ல் சுமார் 7 லட்சம் லிட்டர் அதிகரித்து 30 லட்சம் லிட்டர் அளவில் விற்பனையை அதிகரித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களின் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு அனைவரும் விரும்பும் வகையில், புதிய வகையான கிரீன் மேஜிக் பிளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க அனைத்து தனியார் நிறுவனத்தின் விற்பனை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்