'கூட்டணி கட்சிகளை மதிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின்' - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
கூட்டணி கட்சிகளை மதிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள சானிக்குளம், திருவள்ளுவர் மன்றம் அருகில் துறைமுகம் மேற்கு பகுதி 54-வது வட்டம் சார்பில் 400 பெண்கள் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் உரி அடித்தும், சிலம்பம் சுற்றியும், கால்நடைகளுக்கு பழங்கள் வழங்கியும் சமத்துவ பொங்கலை அப்பகுதி மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"உள்ளமெல்லாம் மகிழ்ச்சி இல்லங்கள் தோறும் எழுச்சி. திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனைகளால் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்காம் ஆண்டாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கலில் உலகத்தை முழு சுதந்திரத்தோடு காணுகின்ற ஆட்சி அமைந்திருக்கிறது. காணும் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
குற்றச் சம்பவங்களை தடுப்பது ஒரு புறம், நடந்த முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது மறுபுறம். இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று பாகுபாடு கிடையாது, தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்ற சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
ஐ.ஐ.டி சம்பவம் தொடர்பாக உரிய குற்றவாளி கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையை முதல்-அமைச்சர் முடக்கிவிட்டுள்ளார். குற்ற சம்பவம் நடந்தால் அதன் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
கூட்டணி கட்சிகளை மதிக்கின்ற ஒரு தலைவர் நாட்டிலே உண்டு என்றால் அது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். கூட்டணி கட்சியினர் குறைகளை சொன்னாலும் கூட அதனையும் நிவர்த்தி செய்து அதன் பிறகு அவர்களை அழைத்து குற்றத்தின் பின்னணி, குற்றத்தின் விளக்கத்தையும் விளக்கி, அசைக்க முடியாத இரு கரங்களாக கைகோர்த்துக்கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. கூட்டணி."
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.