மாமல்லபுரத்தில் களைகட்டும் காணும் பொங்கல்; கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
மாமல்லபுரத்தில் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.;
செங்கல்பட்டு,
காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்கள் மற்றும் சிற்பங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடற்கரை பகுதியில் இன்று கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் கடற்கரை முழுவதும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் கால் நனைக்க கூட அனுமதி அளிக்காத வகையில் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு சென்றுவிடுமாறு பொதுமக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.