முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு காத்திட வேண்டும் - சீமான்

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் முழு உரிமையும் தமிழ்நாடு அரசிற்கே உண்டு என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2024-12-16 13:14 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகத் தளவாடங்கள் ஏற்றிச் செல்வதற்கு அனுமதி மறுத்து, கேரள அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளச் சொல்வது எதேச்சதிகாரமானது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புரிமையைப் பறிக்க முயலும் கேரள அரசின் அதிகார அத்துமீறலை, தடுக்கத்தவறி கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சியைப் போக்கவே 1895-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. விடுதலைக்குப் பிறகு எல்லைப் பிரிப்பின்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி நிலப்பகுதியைக் கேரளாவிடம் தமிழ்நாடு இழந்தது.

இருப்பினும் 1970-ம் ஆண்டு கேரளாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு அணை பகுதியின் நிலத்தையும், நீரையும் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் நில வரிப்பணமாக ரூபாய் 2.5 லட்சமும், மின்உற்பத்திக்கான உபரி வரிப்பணமாக ரூபாய் 7.5 லட்சமும் கேரள அரசுக்கு, தமிழ்நாடு அரசு செலுத்திவருகிறது. அணையைப் பாதுகாத்துப் பராமரிக்கும் உரிமை தமிழ்நாடு அரசின் வசம் இருக்குமென்றும் முடிவு செய்யப்பட்டது. அணை பாதுகாப்பையும், தமிழ்நாடு அரசின் அணையை பாதுகாக்கும் உரிமையையும் சுப்ரீம் கோர்ட்டே உறுதி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்புக்கு மாறாக, கேரள மாநில அரசு முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று பொய்ப்பரப்புரையில் ஈடுபடுவதும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாதபடி தடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் நாள் தமிழ்நாடு அரசினையோ, தேனி மாவட்ட ஆட்சியரையோ, பொதுப்பணித்துறை அதிகாரிகளையோ, கலந்தாலோசிக்காமல் எவ்வித முன்னறிவிப்புமின்றி, கேரள நீர்வளத்துறை மந்திரி ரோசி அகஸ்டின் முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மதகுகளைத் திறந்து அணை நீரினை வெளியேற்றினார்.

கேரள அரசின் ஒப்பந்த விதிமீறலையும், அதிகார அத்துமீறலையும் கண்டிக்கத் தவறிய தி.மு.க. அரசு, அப்படி ஒரு நிகழ்வே நடைபெறவில்லை என்று பூசி மொழுகியது. அவப்பெயருக்கு அஞ்சி, எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தும் தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டித்ததோடு, தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நாம் தமிழர் கட்சி நடத்தியது.

அதன் பிறகாவது, தி.மு.க. அரசு இப்பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்குக் கொண்டுசென்று சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், அணை பாதுகாப்பிற்கான தளவாடப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதியளிக்க மறுக்கும் துணிவு கேரள அரசிற்கு வந்திருக்காது. கடந்த 2022-ம் ஆண்டு இதேபோன்று அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட கேரள அரசு தற்போதும் மீண்டும் எதேச்சதிகார நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் முழு உரிமையும் தமிழ்நாடு அரசிற்கே உண்டு. அதில் தலையிட கேரள அரசிற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. முல்லைப் பெரியாற்றின் அணை பாதுகாப்புரிமை தமிழ்நாட்டிடமிருந்து பறிபோகக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இனியும் தி.மு.க. அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது.

பெரியாரின் வைக்கம் நினைவகத்தைத் திறக்கும் விழாவில் மிகுந்த அக்கறையோடு கேரள முதல்வருடன் ஒன்றாகக் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் நட்பு பாராட்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின், அதே அக்கறையோடு முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பறிப்பதைக் கண்டிக்கத் தவறியதேன்? கேரள அரசு எதேச்சதிகாரப்போக்கினைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தாது ஏன்? 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோன நிலையில், முல்லைப்பெரியாறு அணை உரிமையும் முற்றுமுழுதாகப் பறிபோவதை உடனடியாகத் தடுக்காவிட்டால் தென்தமிழ்நாடு வறண்டு பாலைநிலமாகும்.

ஆகவே, சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்பினைச் சிறிதும் மதியாது முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் கேரள அரசின் ஆணவப் போக்கிற்கு எதிராக உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டுமெனவும், சமரசமற்ற சட்டப் போராட்டம் நடத்தி, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்