லாரி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; காதல் ஜோடி பரிதாப சாவு

காதல் ஜோடி ஜவுளிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

Update: 2024-07-05 01:18 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தை சேர்ந்தவர் சாலமன் (வயது 26). ராதாபுரம் அருகே உள்ள பழவூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா (19). இவர்கள் 2 பேரும் வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். மேலும் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் வேலைக்கு செல்லாமல் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி நம்பிநகர் பகுதிக்கு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் வள்ளியூர் நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நாங்குநேரி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள நான்கு வழிச்சாலை சர்வீஸ் சாலையில் செல்வதற்கு பதிலாக தவறுதலாக மெயின் ரோட்டில் எதிர்புறத்தில் சென்றனர்.

அப்போது அந்த வழியாக கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி நோக்கி ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாலமன், மதுமிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். லாரி மோதி காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்