காஞ்சிபுரம்: பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் போலீசுக்கு சரமாரி வெட்டு
படுகாயமடைந்த பெண் போலீசுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராணி (வயது 33), இவர் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மேகநாதன். இவர் கமப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர்களுக்கு சுதர்ஷினி (7) என்ற மகளும், சந்திரசேகர் (3) என்ற மகனும் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் கோர்ட்டிலும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்து உள்ளனர். இந்த நிலையில் பெண் போலீஸ் டில்லி ராணி நேற்று மதியம் பணி முடிந்து சங்கர மடம் சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கணவர் மேகநாதன் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மேகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டில்லி ராணியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். வெட்டுக்காயங்களுடன் துடிதுடித்த டில்லி ராணியை அக்கம்பக்கத்தினர் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பெண் போலீஸ் டில்லி ராணி அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலையில் பெண் போலீசை வெட்டிய சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.