முதல்-அமைச்சர் இந்துக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லையா? - தமிழக அரசு விளக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து மதத்தினருக்கும் பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.;
சென்னை,
"முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டோ ஷூட்டுக்கு கூட ஒரு இந்துவுக்கு பொங்கல் தொகுப்பு கொடுத்தது கிடையாது" என்று குறிப்பிட்டு சிறுபான்மையினருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் புகைப்படங்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து மதத்தினருக்கும் பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அப்போது அனைத்து மதத்தினரும் அவரது கையால் பரிசு தொகுப்பை பெற்றுக்கொண்டனர். குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் முதல்-அமைச்சர் பரிசு தொகுப்பை வழங்கவில்லை என்பது பொய்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.