அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 9வது சுற்று நிறைவு - 3 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 9வது சுற்று முடிவில் 3 வீரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.;
மதுரை,
தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கு மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவித்துவிடப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கும் கலர் கலர் வண்ண டி-சர்ட்களை அணிந்து களத்தில் இறங்கி வருகின்றனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்படுகின்றன.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்க தயாராகி வருகின்றனர். தற்போதுவரை 9 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. 10வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
9வது சுற்று முடிவுவில் களம் கண்ட காளைகள் 67 அதில் பிடிபட்ட காளைகள் 16. ஒன்பதாவது சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேர், பார்வையாளர்கள் 6 பேர் என 41 பேர் காயமடைந்தனர். மேலும், 9 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதில் மதுரை விளாங்குடியை சேர்ந்த நவீன்குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 9வது சுற்று முடிவில் 3 வீரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி காடுப்பட்டி அசோக்குமார்( 4 காளைகள்), பரளி பாரதிராஜா (2 காளைகள்), எழுமலை நிதிஷ்குமார்( 2 காளைகள்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.