"அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களை கைது செய்வதா?" - டி.டி.வி.தினகரன் கண்டனம்
இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.;
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதற்காக பொதுமக்களை கைது செய்து பழிவாங்குவதா ?. ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் தி.மு.க அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
வனத்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலரை வீடுபுகுந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பின் போது தங்களை சந்திக்க வராத அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்களை காவல்துறையினர் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சாத்தனூர் அணையிலிருந்து முன் அறிவிப்பின்றி திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் இரவோடு இரவாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு முறையான நிவாரணம் கூட வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட்ட மக்கள் மீதே மீண்டும் அடக்குமுறையை கையாண்டிருப்பது தி.மு.க அரசின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.
எனவே, காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் அப்பகுதி மீதான பழிவாங்கும் நடவடிக்கையையும் கைவிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.