பாலமேடு ஜல்லிக்கட்டு - 7 வீரர்கள் தகுதி நீக்கம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-01-15 09:13 IST

மதுரை,

பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டியும் நமது நினைவுக்கு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையெட்டி முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடங்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் முதல் இடத்தையும், 15 காளைகளை அடங்கிய குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 2-வது இடத்தையும், 14 காளைகளை அடக்கிய திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இந்த நிலையில் மாட்டு பொங்கலையொட்டி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது.

அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர். இதற்கிடையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் மது அருந்தியதாகவும், 3 பேர் எடை குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்