சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி: வீடியோ வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா" கலை நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் நேரடியாக கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முந்தினம் (13.1.2025)அன்று சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் தொடங்கிவைத்தார்கள்.
சென்னையில் உள்ள 18 இடங்களில் நேற்று(14.1.2025) முதல் 17.1.2025 வரை 4 நாட்கள் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர். சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா' கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அதிக அளவில் கண்டுகளிக்கும் வண்ணம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்னணு வீடியோ வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 13.1.2025 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும், 14.1.2025 அன்றைய கலை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் 15.1.2015 முதல் 17.1.2025 வரை மூன்று நாட்கள் நடைபெறும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு – சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா" கலை நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் மேற்கண்ட இடங்களில் நேரடியாக கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.