அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியின் சில்லறைத்தன அரசியல் - அமைச்சர் கீதா ஜீவன்
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியின் சில்லறைத்தனமான அரசியலை மக்கள் கள்ளக் கூட்டணி என்று கூறுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் கடந்த இரு வாரங்களாக மக்களைக் குழப்பி கபட நாடகம் நடத்தி வந்தன. அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும். திராவிட மாடல் ஆட்சிக்கு பெண்கள் அளிக்கும் அபரிமிதமான ஆதரவு கண்டு வயிறெரியும் பா.ஜ.க. - அ.தி.மு.க. கள்ளக் கூட்டணி 'தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை' என கதை கட்டி விஷமத்தனமானப் பிரசாரத்தை நடத்தி வந்த நிலையில் அவர்களின் லட்சணம், சென்னை அண்ணா நகரிலும் மதுரையிலும் அவலட்சணமாக அம்பலப்பட்டு இருக்கிறது.
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தியை மறைக்க அ.தி.மு.க. நடத்திய நாடகம்தான் 'யார் அந்த சார்?' என்பது வெட்டவெளிச்சமானது. அ.தி.மு.க.வை அடியொற்றி, அதன் கள்ளக் கூட்டாளி பா.ஜ.க.வும் அடுத்து பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறது. பா.ஜ.க.வின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷா நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை அம்பலத்துக்கு வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த தனது பேத்தி வயதுடைய 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் எம்.எஸ்.ஷா கைதாகியிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் வட்ட செயலாளர் சுதாகரும் பா.ஜ.க. பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷாவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தி போக்சோ குற்றவாளிகளாக இருப்பது பேரவலம். இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், 'அரசியல் கோமாளி' அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தன் வீட்டு முன்பு தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, தன் கட்சிக்காரர் எம்.எஸ்.ஷாவின் பாலியல் லீலைகளுக்காகக் கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா?
'தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை' என வானத்துக்கும் பூமிக்கும் குதித்த தமிழிசை சவுந்தரராஜனும், குஷ்புவும் அமைதி நிலைக்குச் சென்றுவிட்டார்கள். எதுவுமே நடக்காதது போல அமைதி காக்கிறார்கள். மதுரையில் நின்று கண்ணகியைப் போலச் சிலம்பு ஏந்தி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்ட குஷ்பு, பா.ஜ.க.வின் எம்.எஸ்.ஷா கைதுக்கு என்ன செய்ய போகிறார்? கண்ணகி நீதி கேட்ட மதுரையில் போராடிய குஷ்பு, அதே மதுரையில் பா.ஜ.க. பிரமுகரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் நீதி கேட்டுப் போராடவில்லை? அந்த சிலம்பு காணாமல் போய்விட்டதா?
தி.மு.க. ஆட்சிக்கு எதிரான செய்திகளுக்கு எல்லாம் எட்டிப்பார்த்து வீராவேச நடிப்பைக் காட்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.எஸ்.ஷா பாலியல் விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை? எம்.எஸ்.ஷா பின்னால் இருப்பவர் எந்த சார் என கேட்டு பழனிசாமி போஸ்டர் அடிப்பாரா? தனது கள்ளக் கூட்டாளி பா.ஜ.க.வின் பாலியல் குற்றம் என்றதும் ஓடி ஒளிந்து விட்டாரா பழனிசாமி? கள்ள கூட்டணிக்காக பழனிசாமி நடத்தும் கள்ள மவுனமா இது?
10 வயது குழந்தையை பாலியல் சீண்டல் செய்த விவகாரத்தில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் கைது செய்யப்படும் போது பாஜக அமைதி காத்தது. பா.ஜ.க. நிர்வாகி 15 வயது பெண் குழந்தையை பாலியல் தொல்லைக்கு கைதாகும் போது அ.தி.மு.க. அமைதி காக்கிறது. இவ்வளவுதான் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் சில்லறைத்தனமான அரசியல். இதைத்தான் கள்ளக் கூட்டணி என்கிறார்கள் தமிழக மக்கள்.
தி.மு.க. அரசாங்கம் ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்த பிறகும் பிரச்சினை பெரிதாகிவிடாதா, அதில் குளிர்காய முடியாதா என ஏங்குவதுதான் இவர்களின் அரசியலாக இருக்கிறதே தவிர பெண்களின் பாதுகாப்பு குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற கொடூர குற்றவாளிகளை ஒடுக்கத்தான் தமிழக முதல்-அமைச்சர் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்கியுள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றவாளிகள் ஒரு நாளும் தி.மு.க. ஆட்சியில் தப்ப முடியாது.
பாலியல் குற்றவாளிகளை, அதிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்தும் கொடூர மனநிலைக் கொண்டவர்களைத் தனது கட்சியின் பொறுப்பாளர்களாக வைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் பெண்கள் மீது கொஞ்சம் கூட கவலையில்லை. அப்படி கவலை இருந்தால் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.
குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கூட்டணியினர் என்பதால் மூடி மறைக்கின்றனர். இப்படி தங்களுடைய அசிங்கமான அரசியலை எல்லாம் மூடி மறைக்கத்தான் கள்ளக்கூட்டணி நடத்தும் அரசியல் நாடகம் எல்லாம் மக்கள் அறிவர். அதனால் இந்த நாடகங்கள் இனி ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.