மாணவர்கள் மோதலில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-10-09 05:04 GMT

சென்னை,

சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் சுந்தர். இவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி கோஷ்டி மோதல் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுந்தர் மீது 5 பேர் கொண்ட கும்பல் திடீரென கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சுந்தரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கல்லூரி மாணவர் உயிரிழந்ததையடுத்து அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மின்சார ரெயில் வழித்தடத்திலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்களில் இறங்கி வரும் மாணவர்களின் அடையாள அட்டைகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவரை தாக்கியதாக திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன், ஆல்பர்ட், யுவராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதனையடுத்து சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்