அண்ணா நூற்றாண்டில் கருணாநிதி பாடிய கவிதை
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 2008 -ம் ஆண்டு அவர் கவியரங்கில் பாடிய கவிதையை வாசகர்களுக்காக இங்கு வெளியிட்டு உள்ளோம்.
சென்னை,
தமிழுக்காக என்றென்றும் குரல் கொடுத்தவர் கருணாநிதி. தமிழக வரலாற்றில் பெருமைமிகு இடத்தை பிடித்தவர் மு.கருணாநிதி. தமிழக முதல்-அமைச்சராக பணியாற்றிய போது பெரும் சாதனைகளை படைத்தவர். தி.மு.க.வை மாபெரும் சக்தியாக மாற்றியவர்.
வாழ்நாள் முழுவதும் தமிழருக்கும், தமிழுக்கும் தொண்டாற்றிய அண்ணாவின், நூற்றாண்டு விழாவையொட்டி 2008 -ம் ஆண்டு நடந்த கவியரங்கில் கருணாநிதி பாடிய கவிதையை, அவரது நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இன்று வாசகர்களுக்காக வெளியிட்டு உள்ளோம்.
கருணாநிதி பாடிய கவிதை:-
அண்ணனே!
எங்கள் உயிரே
உணர்வே!
இனமானக் கோவே!
எழுச்சியின் வடிவே
எண்ணங்கள் மலரும் எழிலார் சோலையே!
எக்குக் கம்பிகளாம்
இனிய தம்பிகளின் இதயத் துடிப்பே!
முதல் நூற்றாண்டு தொடக்கம் உனக்கு-ஆனால்
அறுபதுக்கு முன்பே முடிந்ததே ஆயுள் கணக்கு?
அழகு தமிழ்ப்பேச்சில்
அருவிகளை வென்றவன் நீ!
ஆங்கிலச் சொல் மழையோ-உன்
ஆற்றலுக்கு ஆலவட்டம்!
எழுத்துக் கற்கண்டுகளை மலையெனக்குவித்தாய்!
எறும்பென மாறி நாங்கள் அவற்றைச் சுவைத்தோம்!
முதல் நூற்றாண்டு தொடக்கம் உனக்கு-ஆனால்
அறுபதுக்கு முன்பே முடிந்ததே ஆயுள் கணக்கு?
அண்ணனே!
அறிவியக்கமாம் நம் கழகம்; ஆட்சி அமைக்கும் என்றாய்!
அண்ணன் சொல் திண்ணமாய்ப் பலிக்குமென்றார்;
பலித்தது; தமிழர்க்கு பழமெனச் சுவைத்தது!
நீவருவதற்கு முன்பு
வரலாறு இருந்தது தமிழர்க்கு! ஆனால்
நீ வந்ததற்குப்பின்தான்
வகையாகத் தமிழன் முழு வரலாற்றை உணர்ந்தான்!
ஆற்றோரம் எனும் தலைப்பில்
அண்ணாமலைப்பல்கலையில் நீ,
ஆற்றிய உரைக்குப் பின்தானே-உனைத்தூற்றியோரும் தொழுது பின்னால் வரத் தொடங்கினார்.
இதிகாச புராணமாய் இறைவன் அவதாரக் கதைகளாய்
இலக்கியம் ஒரு காலத்தில் இருந்தது தமிழருக்கு!
இருப்பினும் நீ வந்த பின்தான்
இயக்கினோம் அதனை;
வீர காவியமாய்-காதல் ஓவியமாய்-
இப்புவி அறிந்திட; ஆய்ந்து தெளிந்திட! அறிவு மணம் கமழ்ந்திட!
அய்யா தந்த துணிவும், அண்ணா நீ தந்த தெளிவுமன்றோ
சங்கத் தமிழுக்கு விளக்கமளிக்கவும்-
தங்கக் குறளுக்குத் தக்கதோர் உரை எழுதவும்
ஒல்காப்புகழ் பெற்ற
தொல்காப்பியத்தை ஊர் மன்றில் உயர்த்திக் காட்டவும்
துணிவை எனக்குத் தந்ததென்பேன்-
அண்ணா மறுமலர்ச்சித் திட்டமென்று பெயர் சூட்டி
கண்ணாகக்காரியமாற்றும் உள்ளாட்சி அமைச்சர் அனையர் பேருழைப்பால்
ஊர்வளம் பல்லாயிரம் பல லட்சமெனப் பெருக்கி நீர் வளம் நிலவளம் உயர்த்தி
பார் வளத்தில் பட்டிக்காடும் பட்டினமும் சமச் சீராய் இருக்கின்ற காட்சி எனக்
காட்டுதற்கு அண்ணா உன் பெயர் ஊட்டிய உணர்வன்றோ
முழுமுதற்காரணமாம்!
சேலத்து இரும்புக்கும், சேது சமுத்திர திட்டத்துக்கும்
செம்மொழி எனும் தகுதி தமிழுக்கும் வேண்டுமென்று நீ விழியால் உரைத்ததை!
வியர்வை சிந்தி சாதிக்க; தமிழகத்தில்
வெகு மக்கள் தயாராயிருந்து வெற்றிக்களைப்
படிப்படியாய் பெற்று வருகின்றோம்
முழு வெற்றி கிடைத்துன் முகம்
முழு நிலவாய் ஒளிரக்காண;
உயிரையும் பணயம் வைப்போம்.....
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்;
அண்ணா; உன் தம்பி இந்தக் கருணாநிதி
தன்னை ஆளாக்கியவரை மறக்க மாட்டான்
ஆயிரம் அடி உயரக் கோபுரக் கலசமாய் அமைந்தாலும்
அந்தக் கோபுரத்தின் அடித்தளம் கோடி கோடித்
தொண்டர்களாம் உடன்பிறப்புக்கள் தான் என்பதை
அவன் உயிர் இருக்கும் வரையில் நினைக்காமல்
இருக்க மாட்டான்.
அண்ணா; நீ இருக்குமிடம் தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா என்று
நான் கேட்டபோது
இந்தா தம்பி யென்று நீ தந்த இதயம்
"மறப்போம்; மன்னிப்போம்" எனும் அந்த மணிவாசகத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கும்-எப்போதும்!
துறப்போம் தூய லட்சியத்தை என்ற பேச்சுக்கு மட்டும்
இந்த இதயத்தில் என்றும் இடமில்லை என்பதை
உலகிற்கு உணர்த்திடுவோம்.
அன்று தமிழகத்தை வளப்படுத்தும் திட்டங்களுக்குப் போராடத்
தடந்தோள் உயர்த்துவதாகத் தமிழர்களை ஏமாற்றியவர்கள்; இன்று;
தாசானு தாசர்களாய் மாறிவிட்டார்
சேதுவே வேண்டா மென்கின்றார், செப்படி வித்தைக்காரர்!
சினம் கொள்ளல் தீதன்று; சேதுவும் அதனால் வரும்-தமிழ்
நிலச் செழிப்பும் தரை மட்டமாவதைத் தடுப்போர் கண்டு;
சிங்கத்தின் கூட்டமன்றோ; சிறு நரிகள் சூழ்ச்சிக்கா; தலை வணக்கம்!
பொங்குற்ற புலிகள் முன்னே புல்லியர்க்கா ஆர்ப்பாட்டம்?
எங்குற்றான் என் தமிழன்?
செங்குத்துத் தூணைப் போல் நிற்கின்றானா?
அங்கத்தில் துடிப்பின்றிக் கிடக்கின்றானா?
அய்யோ பாவம்;
அவனுக்குச்
சங்கத்தில் பாட்டெழுதி அரங்கேற்றுங்கள்!
தங்கத்தில் சிலையொன்று அமைத்திடுங்கள்-
உளி இரண்டை உதட்டின் மேல் வைத்தாற் போல்
ஒளி மிகுந்த பாண்டியர்க்கு மீசையுண்டு
அளி வந்ததில்லையென்று இன முழக்கம்
செய்வதுபோல்-காதின்
வெளி வரையில் படர்ந்திருக்கும் சோழன் மீசை!
எழுதினாய் தேர்தல் நேரத்தில் அறிக்கையாக-
மலிவான விலையில் மக்களுக்கு அரிசி தரவேண்டுமென்று!
அதனை
உன் மொழியிலே சொல்ல வேண்டுமென்றால்
"மக்களுக்குப் படியரிசி ஒரு ரூபாய்க்குப் போட வேண்டுமென்றேன்-அதற்குள்
மாறன் அதை முரசொலியில் அண்ணா வாக்குறுதி யென எழுதி விட்டான்
மலையைப் புரட்டும் காரியமாய் அன்று நான் கருதியதை; இன்று
மாநில மக்களின் மனம் களிக்க என் தம்பி கருணாநிதி
கிலோ அரிசி கிடைக்கும் ஒரு ரூபாய்க்கு என அறிவித்து;
என் கல்லறையில் கணக்கின்றி மலர் மாரி பொழிகின்றான்-நானும்
அவனை மகிழ்ச்சியாக வாரி அணைத்து வாழ்த்துகின்றேன்"-
இது கண்டு-
வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு....
வாய்மையற்ற வன்கணாளர் வசை பாடுகின்றார் அதை
இசையாக ஆக்கிக் கொள்வீர் என் தம்பியரே என அறிவுரை கூறுகின்ற
காஞ்சிப் புத்தரே; உன் காலடியில் கழகம் சரணம் கச்சாமி!
அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கத்தில்-இந்திய
அரசியல் நிலவரத்தில் அணுவளவு கவனம் செலுத்தலாமா?
ஆம் அணுவில் தானே அத்தனை பிரச்சினையும் ஆரம்பித்தது-
அனைத்து நாடுகளும் கவனித்த அந்தபிரச்சினையில்,
இடது சாரிகளுக்கும் இங்குள்ள
இந்தியப் பேரரசின் ஆட்சியாளருக்கும்
இடையில் நான் நடுநிலைக் கொண்டு
மதச்சார்பற்ற மனித நேய ஆட்சி தான்
மக்களைப் பாதுகாக்கும்வாய்மையுடையது எனும்
மனமுடையோனாய்த்தான் செயலாற்றினேன்!
மறுப்புரைப்போர் வெறுப்புரைப்போர், என
இருசாரார் இரு முனையில் இருந்த போதும்
எதிர்கால இந்தியாவை எண்ணிப்பார்த்தே
முடிவுகளை எடுத்துவந்தேன்
இருசாராருக்கும் உறவு முடிச்சுகளைப் போட்டுவந்தேன்
இறுதிக்கட்டம் என்னைக்கலக்காமலே முடிவெடுத்து
எதிர் எதிராய் நின்றுவிட ஏதேதோ ஆகிவிட்டது
ஏடுகளில் மட்டுமே அதைப்படித்து இதயம் நொந்தேன்-
மனித நேய உணர்வா, மதவெறிப்பூசலா
எப்பக்கம் நிற்பது என்ற கேள்விக்கு விடை காண
அணிவகுப்போம் வா என்று அழைத்தது
அன்புச் சகோதரி சோனியாவின் அரசியல் பாசறை
அதனால்
மத நல்லிணக்கம் விரும்பிப் போற்றி
மனிதநேயம் மதிக்கின்ற இடத்திலேயே இருந்துவிட்டேன்
மதச்சார்பற்ற அரசொன்று மத்தியிலும் மாநிலத்திலும் அமைவதற்கு மக்களைத்திரட்டுவோம்
வாரீர் என்று அழைக்கின்றேன்.
மன்றத்தில் திரண்டியிருக்கும் பெருமக்காள்
பெரியார், அண்ணா கனவுகளில் பெரும்பகுதி
நிறைவேற்றம் எனினும்
தடுமாற்றமின்றி தமிழ் மொழியையும்
மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிட உரத்த குரல் கொடுப்போம்!
போராட்டத்துக்காக கோரிக்கை எழுப்பாமல்
கோரிக்கைக்காகப் போராடிட நல்வழித் தேர்ந்தெடுப்போம்!
எதிர்கால இந்தியா வலிமை பெற
வளம் பெற வலியுறுத்துவோம்!
மாநில சுயாட்சி;
மத்தியிலே கூட்டாட்சி!
இவ்வாறு அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கவிதை பாடினார்.
Date: 16-09-2008