திருநள்ளாறு கோவில் யானை குதூகல குளியல்

கோடை வெயிலை தணிக்க திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் யானை தினந்தோறும் குதூகலமாக குளியல் போடுகிறது.

Update: 2023-03-26 17:56 GMT

காரைக்கால்

கோடை வெயிலை தணிக்க திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் யானை தினந்தோறும் குதூகலமாக குளியல் போடுகிறது.

யானை பிரக்ருதி

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது, லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வாறு கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் வாசலில் நிற்கும் கோவில் யானை பிரக்ருதிக்கு, பழம், பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது வாடிக்கை. கோவிலில் நடைபெறும் திருவிழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள், பூஜைகளில் கோவில் யானை பிரக்ருதி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வருகிறது.

குதூகல குளியல்

இந்த யானையை பாகன்கள் முருகேசன், மணிகண்டன் ஆகியோர் பராமரித்து வருகின்றனர். பிரக்ருதி யானையை தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளை கோவிலுக்கு சொந்தமான சரஸ்வதி தீர்த்தக்குளத்தில் குளிக்க வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது, சுட்டெரிக்கும் கோடை வெயில் தொடங்கியுள்ளதால் யானை மதிய நேரத்தில், குளத்திற்கு போகும் வழியை எட்டி பார்த்து வந்தது. இதனை அறிந்த பாகன்கள், கோவில் நிர்வாக அதிகாரியிடம் அனுமதி பெற்று வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக, அதிகநேரம் குளிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

தினமும் காலை, மாலை வேளைகளில் தலா 1 மணி நேரம் குளத்தில் குளிக்கும் யானை, தற்போது கூடுதல் மகிழ்ச்சியில், மணிக்கணக்கில் குளத்தில் குதூகல குளியல் போட்டுவருகிறது.

கரையேற மறுக்கிறது

யானை பாகன் குளத்தை விட்டு வெளியேறினாலும், குழந்தையை போல், யானை குளத்தை விட்டு வெளியேற மறுத்து குளியலில் ஆர்வம் காட்டிவருகிறது. தும்பிக்கையால் தண்ணீரை உடலில் இரைத்து உற்சாகமடைகிறது. சில நேரத்தில் பாகன் குளத்தில் மூழ்கி வெளியேறி வர, பாகனை காணாமல் யானையும் குளத்தில் மூழ்கி தேடுகிறது.

யானையின் இந்த குளியலை கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் உற்சாகமாக கண்டுகளிக்கின்றனர். இந்த காட்சியை சிலர் செல்போனில் படம்பிடித்து வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்