கார்த்திகை தீபத்திருநாள்: புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி வாழ்த்து

நாளை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

Update: 2023-11-25 05:34 GMT

புதுச்சேரி, 

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கார்த்திகை தீப திருநாளுக்கான தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கார்த்திகை தீபத்திருநாளும் ஒன்றாகும். இந்நாளில், இருள் மற்றும் தீமைகளை நீக்கும் முடிவில்லாத ஒளியின் ஆதாரமான சிவபெருமானின் அருளாசியைப் பெற வீடுகளிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.

தீபத்தின் ஒளி எப்படி அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ, அதுபோல் நமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும்.

கார்த்திகை தீபத்தின் ஒளி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிகாட்டட்டும் என்று கூறி அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்