புதுச்சேரியை சேர்ந்த தாய்-மகன் உள்பட 3 பேர் பலி

திண்டிவனம் அருகே டிப்பர் லாரி மீது கார் மோதியதில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-06-06 17:20 GMT

டிப்பர் லாரி மீது கார் மோதி நிற்பதையும், பலியான முருகனையும் படத்தில் காணலாம்.

புதுச்சேரி

திண்டிவனம் அருகே டிப்பர் லாரி மீது கார் மோதியதில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிப்பர் லாரி மீது கார் மோதல்

புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு இ்ன்று அதிகாலை காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை முருகன் ஓட்டினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அருவாப்பாக்கம் பகுதியில் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரமாக நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

3 பேர் பலி

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி காரில் வந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது தாய் சாந்தி (60), மனைவி ஹேமாவதி (37), மகள்கள் கிரிஷிகா (3), கிரிஷ் கீதா (3), உறவினர்கள் ஜெகதீஸ்வரி (58), மங்களவதி (39), பூர்விதா (12) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் காயமடைந்த சாந்தி உள்பட 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி, மங்களவதி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இவர்களை சேர்த்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

5 பேருக்கு தீவிர சிகிச்சை

மேலும் படுகாயம் அடைந்த முருகனின் மகள்கள் உள்பட 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பலியான முருகனின் உடலை கிளியனூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி தாய்-மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்