பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை

புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-25 16:28 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூலித்தொழிலாளி

புதுவை கொம்பாக்கம் பாப்பாஞ்சாவடி 1-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது44). கூலித்தொழிலாளி. இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

முதலியார்பேட்டை இந்திரா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் டிரைவர் ஸ்டீபன் (34). கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி ஸ்டீபன், தனது அண்ணன் செந்திலிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ், செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் வெட்டினார். மேலும் தடுக்க முயன்ற ஸ்டீபனையும் வெட்டியதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஸ்டீபன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரமேஷ் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் சிறையில் இருந்து ரமேஷ் வெளியே வந்தார்.

இந்தநிலையில் இன்று மாலை ரமேஷ் முதலியார்பேட்டை ஆலை ரோட்டில் உள்ள பா.ஜ.க.வை சேர்ந்த அசோக்பாபு எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஸ்டீபன் ரமேசிடம் தகராறு செய்துள்ளார்.

வெட்டிக்கொலை

தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ஸ்டீபன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரமேசை சரமாரியமாக வெட்டினார். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பலத்த வெட்டு விழுந்தது. இதனால் நிலைகுலைந்து போன ரமேஷ் சம்பவ ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். குடியிருப்புகள், கடைகள் மிகுந்த அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த முதலியார்பேட்டை போலீசார் உயிருக்கு போராடிய ரமேசை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரமேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஸ்டீபனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்