கோவில் முன் பந்தல் அமைக்கும் பணி மும்முரம்
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவையொட்டி கோவில் முன் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால்
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவையொட்டி கோவில் முன் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாங்கனி திருவிழா
காரைக்கால் பாரதியார் வீதியில் காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. இங்கு அம்மையாரின் வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா வருகிற 30-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கி, 4 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 1-ந் தேதி காலை புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, காரைக்கால் அம்மையார்- பரமதத்த செட்டியார் திருக்கல்யாணமும் நடக்கிறது.
ஜூலை 2-ந் தேதி காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதிவுலாவும், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து மாலையில் கோவிலை வந்தடையும் பிச்சாண்டவரை அம்மையார் எதிர்கொண்டு வரவேற்று அமுது படைக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பிரமாண்ட பந்தல்
மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்கால் அம்மையார் கோவில் வீதியான பாரதியார் வீதியில் 75 மீட்டர் நீளம், 30 அடி உயரம், 22 அடி அகலத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. இந்த பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பந்தலில் ஒரு மாதத்துக்கு கடைகள் அமைக்கப்படுகிறது. மாவட்ட நலவழித்துறை சார்பில் மருத்துவ முகாம், கண்காட்சி அரங்கம், போலீசாருக்கான கட்டுப்பாட்டு அறை, தண்ணீர் பந்தல் ஆகியவை இதில் இடம்பெறுகிறது.