ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்

ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.

Update: 2023-08-07 18:20 GMT

திருநள்ளாறு

ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போதுமானதாக இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிதம்பரநாதனை தொடர்பு கொண்டு இந்த குறைபாட்டை உடனடியாக சரி செய்ய கேட்டு கொண்டார்.

குறித்த நேரத்தில் பள்ளிக்கு...

பின்னர் மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- பெண்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். பெண்கள் வாழ்வில் முன்னேற கல்வி ஒன்று தான் அடிப்படை அவசியம். பல்வேறு துறைகளில் பெண்கள் தற்போது சாதித்துக் கொண்டு வருகிறார்கள். எனவே மாணவிகள் எப்போதும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும். முக்கியமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு மாதம் இரு முறை நடத்த வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் படிப்பு மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது பள்ளியின் துணை முதல்வர் விஜயமோகனா, இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதனை போக்க தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். விரைவில் ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்.

மருந்து, மாத்திரை

இதைத்தொடர்ந்து காரைக்கால் நேரு நகரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம், வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு எத்தனை நோயாளிகள் தினமும் வருகிறார்கள்? போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா? என கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்