புதுச்சேரி, காரைக்கால் கோவில்களில் சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி, காரைக்கால் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Update: 2023-04-14 14:23 GMT

புதுச்சேரி

தமிழ் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி, காரைக்கால் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

மணக்குள விநாயகர் கோவில்

தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு தங்கக்கவசம் மற்றும் அமெரிக்கன் டயமெண்ட் (வைரம்) கிரீடம் அணிவிக்கப்பட்டது.

காலை முதலே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

இதர கோவில்கள்

இதேபோல் கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர் கோவில், காந்தி வீதி பெருமாள்கோவில், ஈஸ்வரன்கோவில், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பழங்களை சாமிக்கு படைத்து வழிபட்டனர்.

சனீஸ்வரர் பகவான் கோவில்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திரு.பட்டினம் கீழையூரில் மழை மாரியம்மன் கோவிலில் மழை மாரியம்மன் மற்றும் விநாயகர், முருகன், காளியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்று. மழை மாரியம்மன் வெள்ளியங்கி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.

அதேபோல், காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள ஏழை மாரியம்மன், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன், மார்கெட் வீதி மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

திருவாண்டார் கோவில்

தமிழ் புத்தாண்டையொட்டி, திருவாண்டார்கோவில் பஞ்சநதீஸ்வரர் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பஞ்சநதீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரிக்கு நவதானிய யாகம் குண்டம் வளர்க்கப்பட்டு திருகும்பங்கள் வைத்து 9 வகையான பூக்கள் நவதானியங்கள் வைத்து திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்