விஷ சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம்

மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம் காசோலைகளைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

Update: 2023-06-06 17:58 GMT

மரக்காணம்

மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 52 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்தநிலையில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஏற்கனவே தலா ரூ.10 லட்சத்தை அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பொன்முடி ஆகியோர் வழங்கினர்.

இதற்கிடையே சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 52 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு இனிமேல் சாராயம் குடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வைத்து 52 பேருக்கும் காசோலைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், ஒன்றியக்குழு தலைவர் தயாளன், துணை தலைவர் பழனி, துணை செயலாளர் ரவிக்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்