நெல், கரும்பு விவசாயிகளுக்கு நிவாரண தொகை

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு விவசாயிகளுக்கான நிவாரண தொகை அவரவர் வங்கிக்கணக்கில் ஒரு வாரத்தில் செலுத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2022-09-28 17:11 GMT

புதுச்சேரி

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு விவசாயிகளுக்கான நிவாரண தொகை அவரவர் வங்கிக்கணக்கில் ஒரு வாரத்தில் செலுத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரும்பு- பப்பாளி

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த நெல் மற்றும் காய்கறி பயிர்களுக்கு நிவாரண தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கிட முதல்-அமைச்சர் அறிவித்தபடி விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 வழங்கிட அரசு வெளியிடப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்டது.

தற்போது 2-ம் தவணைத்தொகையாக கரும்பு மற்றும் பப்பாளி சாகுபடி செய்து மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்படி புதுவையில் உள்ள 871 விவசாயிகளுக்கு ரூ.93 லட்சத்து 24 ஆயிரம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காரைக்கால்

மேலும் காரைக்கால் பகுதியில் பாதிப்படைந்த 1,153 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்த 4 ஆயிரத்து 248 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகை ஒருவார காலத்துக்குள் புதுவை மற்றும் காரைக்கால் விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

இதன் மூலம் புதுவை பகுதியில் 6 ஆயிரத்து 925 விவசாயிகளும், காரைக்கால் பகுதியில் 4 ஆயிரத்து 979 விவசாயிகளும், ஏனாமில் 231 விவசாயிகளும் பயனடைவர். மொத்தமாக ரூ.10 கோடியே 34 லட்சத்து 56 ஆயிரத்து 400 கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு, காய்கறி மற்றும் பப்பாளி பயிர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்